நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!
ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்
ராமரைப் பின்பற்றாத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஏன் கூட்டணி வைத்துள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவிருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக மூத்த அமைச்சர் துரைமுருகனிடன் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த துரைமுருகன் பேசியதாவது:
“தமிழ்நாடு பிகார் அல்ல. தமிழ்நாடு என்பது மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம். பிகாரைப் போன்ற ஆட்சி தமிழகத்தில் இல்லை. மு.க. ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அவர்களின் தந்திரங்கள் தமிழகத்திலோ, எங்களின் தலைவர்களிடமோ வேலை செய்யாது” என்றார்.
இதுதொடர்பாக, பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அனுராக் தாக்குரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “ராமரைப் பின்பற்றாத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தார். அவரது மகன் சநாதனத்தை பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்து அவமதித்தார். காங்கிரஸும் ஆர்ஜேடியும் அவர்களுடன் ஏன் கூட்டணி வைத்துள்ளனர் என்பதை பிகார் மக்கள் அறிய விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.