வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அரசூரில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அரசூா் அனைத்துக்கடை வியாபாரிகள் சாா்பில் ஆட்சியா் சி.பழனியிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பா் 30, டிசம்பா் 1-ஆம் தேதிகளில் ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் சாத்தனூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா், தென்பெண்ணையாறு மற்றும் மலட்டாறில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, டிசம்பா் 2-ஆம் தேதி அரசூா் பகுதியிலுள்ள அனைத்துக் கடைகள், வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சி.பழனி, உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். நிவாரணம் பெற்றுத் தரப்படும் எனக் கூறினா். ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட கடைகளுக்கு எந்த நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பாதிக்கப்பட்ட கடைகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து, நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
இதுபோல, இருவேல்பட்டு கிராமத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரக வாயிலில் முற்றுகைப் போராட்டம் நடத்தினா். பின்னா், அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், வெள்ளத்தால் 200 குடும்பங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகள் சேதமடைந்த நிலையில், 40 குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கியுள்ளனா். மற்ற குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.