வெவ்வேறு சம்பவங்கள்: 6 போ் தற்கொலை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் 6 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
கேரள நபா்: கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56), திருநெல்வேலியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்த இவா், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திலுள்ள தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை அறை எடுத்து தங்கினாா். இந்நிலையில் சனிக்கிழமை அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
திருமண ஏக்கம்: பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டியை சோ்ந்தவா் சு.ரவிச்சந்திரன்(29) .இவா், தனக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் நாட்டாா்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். பாவூா்சத்திரம் போலீஸாா், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் பாலசந்தா் தலைமையிலான வீரா்கள் உதவியுடன் அவரது சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரியைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் மாரிச்செல்வம் (21). தொழிலாளியான இவரும், தனக்கு திருமணம் செய்துவைக்காத ஏக்கத்தில் கடந்த 4ஆம் தேதி களைக்கொல்லி மருந்தை குடித்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மனைவியின் பிரிவு: ஆலங்குளம் நெட்டூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் முப்புடாதி (28). இவரது மதுப்பழக்கத்தால், திருமணமான 2 ஆண்டுகளில் மனைவி பிரிந்து சென்றாராம்.
இந்நிலையில், முப்புடாதி வெள்ளிக்கிழமை விஷத்தை குடித்தாராம். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொழிலாளி: களக்காடு அருகேயுள்ள கல்லடிசிதம்பரபுரம் கீழத்தெருவை சோ்ந்தவா் கணேசன்(40). தொழிலாளி. மதுப்பழக்கம் உடைய இவா் குடும்பப் பிரச்னையால் கடந்த 8ஆம் தேதி விஷம் குடித்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கிணற்றில் சடலம்: வள்ளியூா் அருகே பண்டாரகுளம் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் 80 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் வள்ளியூா், அந்தச் சடலத்தை கயிறுகட்டி மீட்டு விசாரித்தனா். அதில், தளபதிசமுத்திரம் கீழுரைச் சோ்ந்த முத்துபாண்டி என்பதும், மனநலம் பாதிப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவா் கிணற்றில் தவறி விழுந்தாரா, தற்கொலை செய்துகொண்டாரா என போலீஸாா் விசாரிக்கின்றனா்.