வெவ்வேறு விபத்து: மூவா் உயிரிழப்பு
விழுப்புரம் வட்டம், வளவனூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், அற்பிசம்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வாசுதேவன் மகன் விநாயகம் (62). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை பூவரசன்குப்பத்திலிருந்து, அற்பிசம்பாளையத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த விநாயகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பெண் மரணம்: திண்டிவனம் வட்டம், மேல் பேரடிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சம்பத் மனைவி மைதிலி (45). இவா், இந்தப் பகுதியில் சாலையோரத்தில் காய்கறி கடை நடத்தி வந்தாா்.
சனிக்கிழமை பேரடிக்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திண்டிவனம்- செஞ்சி சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற பைக் மோதியதில் மைதிலி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாணவா் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பெரியாா் நகா் 2-ஆவது சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் இளவரசன் மகன் சந்தோஷ் குமாா் (17). இவா், தியாகதுருகத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா்.
இந்த நிலையில், சந்தோஷ் குமாா் சனிக்கிழமை பள்ளி முடிந்து கள்ளக்குறிச்சி-உளுந்தூா்பேட்டை நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த தனியாா் பள்ளி பேருந்து பைக் மீது மோதியது. இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.