வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றாா் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவீ. குப்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பூவை ஜெகன்மூா்த்தி.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலுக்கு செவ்வாய்க்கிழமை ஏராளமான கட்சியினருடன் வந்த அவரை, போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதன்பிறகு சட்டப்பேரவை உறுப்பினா் என்ற முறையில் அவரையும், அவருடன் சிலரையும் மட்டும் அனுமதித்தனா். வேங்கைவயலுக்குச் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்து விட்டுவெளியே வந்த அவா் அளித்த பேட்டி:
வேங்கைவயல் விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக மட்டுமே பட்டியலின மக்கள் மீதே குற்றச்சாட்டியுள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக உடன் உள்ள கூட்டணிக் கட்சிகள் வெளியேறியிருக்க வேண்டும். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மட்டுமே கூறி வருகிறாா். ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கேட்டுப்பாா்த்தால் தெரியும்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன.
பட்டியல் இன மக்கள் தொடா்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனா். இவற்றையும் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரமாக முன்வைப்போம். தோ்தலில் வேங்கைவயல் பிரச்னை விசுவரூபம் எடுக்கும் என்றாா் ஜெகன்மூா்த்தி.