`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ - நெகி...
வேளாண் தனி நிதிநிலை அறிக்கை... வெத்து வேட்டாகவே இருக்கும்!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘‘தி.மு.க அரசுதான் தமிழ்நாட்டில், முதன்முறையாக வேளாண் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையைத் தாக்கல் செய்தது’’ என்று கடந்த நான்கு ஆண்டுகளாகவே பெருமை பேசிவருகிறார், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.
‘‘வரலாறு முக்கியம்தான், ஆனால், கடந்த நான்கு வேளாண் நிதி நிலை அறிக்கை மூலம் என்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்’’ என்று கதறுகின்றன விவசாய சங்கங்கள்.
‘‘வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு, விவசாயிகள் வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், கருத்துக்கேட்பு கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், அந்தக் கருத்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்துகள் எவை என்பது பற்றியெல்லாம் தெளிவாக தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
கூடவே, ‘‘2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும். ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும்...’ என்பன உட்பட வேளாண்மை சார்ந்த 83 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் 73 வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவில்லை’’ என்றும் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்கள்.
விவசாயத்தின் மீது அரசாங்கத்துக்குத் தெளிவான, தனித்த பார்வை இருக்க வேண்டும்; விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் உடனுக்குடன் சென்று சேர வேண்டும்; அப்படி அவையெல்லாம் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்... உள்ளிட்ட காரணங்களுக்காகத்தான், ‘வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கை வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் தமிழ்நாடு அரசாங்கமும் வரலாற்றுச் சாதனையாக தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆரம்பித்தது. ஆனால், அதன் பலன் இன்னும் முழுமையாக விவசாயிகளைச் சென்று சேரவில்லை என்பதையே காட்டுகிறது, விவசாய சங்கங்களின் இந்த ‘வெள்ளை அறிக்கை’ கோரிக்கையும், தேர்தல் வாக்குறுதி தொடர்பான குற்றப் பத்திரிகையும்!
வெள்ளை அறிக்கை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைத் திரும்பிப் பார்ப்பதோடு... இதுவரை நிறைவேற்றப்படாத திட்டங்கள், இன்னும் தேவைப்படும் ஆக்கபூர்வமான திட்டங்கள் என அனைத்தையும், தங்களின் கடைசி ஓராண்டு ஆட்சிக் காலத்திலாவது நிறைவேற்ற தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இல்லையேல், ‘நாங்கள்தான் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டோம்’ என்று சொல்லிக்கொள்வது, வெத்து வேட்டாகவே இருக்கும்!