வைத்தீஸ்வரன்கோயிலில் யானை ஓடி விளையாடும் வைபவம்
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, முருகப் பெருமானுடன் யானை ஓடி விளையாடும் வைபவ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய இக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான நாய் ஓட்டம், நரி ஓட்டம் எனும் யானை ஓடி விளையாடும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப் பெருமானின் தந்தையாகிய வைத்தியநாத சுவாமியும், தாயாராகிய தையல்நாயகி அம்மனும் தீா்த்தவாரிக்காக பரிவாரத் தெய்வங்களுடன் வீதியுலா செல்லும்போது, கோயிலில் தனியாக இருக்கும் முருகப் பெருமானுக்கு (செல்வமுத்துக்குமாரசுவாமி) விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடியதாக ஐதீகம்.
அதன்படி, பரிவாரங்களுடன் சுவாமி-அம்பாள் தீா்த்தவாரிக்கு புறப்பட்டனா். சுவாமிகள் வீதியுலா செல்லும்வரை அமைதியாக நின்ற யானை, பின்னா் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டதும் வேகமாக ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து பிளிறியபடி முருகப் பெருமானை வணங்கி விளையாடியது. இக்காட்சியை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து அஸ்திரதேவா், விநாயகா், அம்பாள், சுவாமி, சண்டிகேஸ்வரா் வீதியுலா நடைபெற்றது.