கே.எல்.ராகுல் அதிரடி: சிஎஸ்கேவுக்கு 184 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதையும் படிக்க: போட்டியின் நடுவே திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? மௌனம் கலைத்த பாண்டியா!
கே.எல்.ராகுல் அதிரடி; 184 ரன்கள் இலக்கு
டாஸ் வென்று முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தபோதிலும், கே.எல்.ராகுல் மற்றும் அபிஷேக் போரெல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, கேப்டன் அக்ஷர் படேல் 21 ரன்கள், சமீர் ரிஸ்வி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதையும் படிக்க: ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது.