ஐ.டி. துறையில் பணியாற்றும் மனைவி மீது சந்தேகம்: சுத்தியால் அடித்தே கொன்ற கணவன்!
சாஃப்ட்வேர் என்ஜியராகப் பணியாற்றும் மனைவியின் மீது கணவனுக்கு எழுந்த சந்தேகம்.., அவரை அடித்தே கொல்லும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக திகழும் தில்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியிலுள்ளதொரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் 42 வயதான ஆஸ்மா கானின் நடத்தையில் அவரது கணவர் நூர்-உல்லா ஹைதருக்கு(55) சந்தேகம் எழுந்துள்ளது.
நூர்-உல்லா ஹைதர் பிகாரைச் சேர்ந்தவர் என்பதும் அவர் தற்போது வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். மேற்கண்ட தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களது மகன் பொறியியல் கல்வி பயிலும் மாணவராவார். மகள் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்தநிலையில், வேலைக்குச் செல்லும் மனைவி மீது கணவனுக்கு பல நாள்களாக சந்தேகம் இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக, இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் வீட்டிலிருந்த சுத்தியால் தமது மனைவியை அடித்தே கொன்றுவிட்டார் அந்த நபர்.
தாயை தந்தையே அடித்துக் கொன்றதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன அவர்களது மகன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் நூர்-உல்லா ஹைதரை கைது செய்ததுடன், அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.