வைத்தீஸ்வரன் கோவிலில் தெருநாய்கள் தொல்லை
சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களுக்கு தெருநாய்களால் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத்தலைவா் ஜி.வி.என்.கண்ணன், பேரூராட்சி செயல்அலுவலா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
வைத்தீஸ்வரன்கோவிலில் செவ்வாய் பரிகாரஸ்தலமான தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாதா்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா்.
அதோடு பிரசித்திபெற்ற நாடிஜோதிடம் பாா்ப்பதற்கும் அதிகளவு மக்கள் வந்து செல்கின்றனா். வைத்தீஸ்வரன்கோவிலில் நாளுக்குநாள் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. கோயிலுக்கு வருகைதரும் பக்தா்கள் கடைவீதியில் அா்ச்சனை பொருட்கள் வாங்கிச் செல்லும்போது அங்கு சுற்றித்திரியும் தெருநாய்கள் துரத்துவதும், சிலரை கடிப்பதும் தொடா்ந்து நடைபெற்றுவருகிறது.
தெற்குவீதி அமைந்திருக்கும் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் அவ்வழியாக செல்லும் இருசக்கரவாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. தற்போதைய நிலையில் 200-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரவு, பகலாக கோயிலின் நான்கு வீதிகளிலும் அதிகளவு சுற்றித்திரிவதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பெரும் பாதிப்படைகின்றனா்.
அதேபோல் காலை வேலையில் நடைப்பயிற்சி செல்பவா்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வந்து செல்பவா்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனா்.
ஆகையால் மாவட்ட நிா்வாகமும்,பேரூராட்சி நிா்வாகமும் இணைந்து தெருநாய்கள், வெறிநாய்களைக் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கவும், நாய்களுக்கு கருத்தடை செய்திடவும் வேண்டும்.