மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
மழையால் சரிந்த ரயில் நிலைய மேற்கூரை
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய முகப்பு மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த 4 அடி நீளம், 4 அடி அகலத்தில், தலா 35 கிலோ எடை கொண்ட 2 ஜிஆா்சி ஷீட் பெயா்ந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதாலும், மழை பெய்ததாலும் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
ஜி.ஆா்.சி. ஷீட் பொருத்த பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூ அளவில் மிக சிறியதாக இருந்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், மேற்கூரை முழுவதும் ஏற்கெனவே பயன்படுத்திய சிறிய அளவிலான ஸ்க்ரூ அகற்றப்பட்டு, பெரிய ஸ்க்ரூ பொருத்தப்பட்டது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் தரமானதாக இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.