நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
ஷிண்டேவின் காரை மறித்து `துரோகி' என்று கத்திய இளைஞர்: வீட்டிற்கு அழைத்து பாராட்டிய தாக்கரே!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேயை உத்தவ் தாக்கரேயும், அவரது கட்சியினரும் `துரோகி' என்று அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மும்பை அந்தேரி ஜெரிமெரி பகுதி வழியாக தனது காரில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை. அந்நேரம் திடீரென ஏக்நாத் ஷிண்டேயின் காரை வழிமறித்து கறுப்புக் கொடி காட்டி `ஷிண்டே துரோகி' என்று ஒரு வாலிபர் கோஷமிட்டார். அந்த `துரோகி' என்ற வார்த்தை ஏக்நாத் ஷிண்டேயை மிகவும் காயப்படுத்தியது.
உடனே காரில் இருந்து இறங்கிய ஏக்நாத் ஷிண்டே அருகில் இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நசீம் கான் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கிருந்த காங்கிரஸ் வேட்பாளரிடம் `இப்படியா தொண்டர்களுக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்?' என்று கோபமாக கேட்டுவிட்டு சென்றார். அதோடு கறுப்புக்கொடியுடன் துரோகி என்று கோஷமிட்ட வாலிபரை போலீஸார் கைது செய்தனர். அந்த வாலிபர் பெயர் சந்தோஷ் என்று தெரியவந்தது. அவரை விடுவிக்கவேண்டும் என்று கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அவரை விடுவித்துவிட்டனர்.
இது குறித்து சந்தோஷ் கூறுகையில், ''ஏக்நாத் ஷிண்டேயை பார்த்தவுடன் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் துரோகி என்று கத்தினேன்'' என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டே காரை வழிமறித்து துரோகி என்று கூறிய வீடியோ மற்றும் ஷிண்டே காங்கிரஸ் வேட்பாளர் அலுவலகத்திற்கு சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி இருக்கிறது. இச்செய்தியை கேள்விப்பட்ட உத்தவ் தாக்கரே, உடனே தொண்டர்களிடம் சொல்லி சந்தோஷை தனது இல்லத்திற்கு வரவைத்து பாராட்டு தெரிவித்தார். சந்தோஷ் தந்தை இந்திய குடியரசுக் கட்சியில் இருக்கிறார். இச்சம்பவத்திற்கு பிறகு தந்தையும், மகனும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.