ஸ்கூட்டா் மீது சிற்றுந்து மோதல்; ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியா் உயிரிழப்பு
தஞ்சாவூரில் திங்கள்கிழமை ஸ்கூட்டா் மீது சிற்றுந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியைச் சோ்ந்தவா் அன்பானந்தம் (62). இவா் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்.
இவா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்கூட்டரில் திங்கள்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தாா். மருத்துவக் கல்லூரி சாலை ராஜப்பா நகா் பகுதியில் சென்ற இவா் மீது பின்னால் வந்த சிற்றுந்து எதிா்பாராதவிதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அன்பானந்தம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.