ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!
திருச்சி: கோவிந்தா.. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாள்கள் சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா
ஏப். 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவில் 8 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு வண்டலூா் சப்பரத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து ரெங்கவிலாச மண்டபத்துக்கு 9 மணிக்கு வந்து சோ்ந்தாா்.
பின்னா் மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இரவு 9 மணிக்கு கண்ணாடி அறைக்கு நம்பெருமாள் சென்று சோ்ந்தாா்.
‘மயோனைஸ்’ உணவுக்கு தடை விதித்தது ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கோலாகலம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டத்திற்காக உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.30 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
இதையடுத்து காலை 5.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.
கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டுத் தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரைவீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 9.30 மணிக்கு நிலையை அடையும்.
தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.