ஆபரேஷன் சிந்தூர்: `ஜெய்சங்கரின் மௌனம் மிகவும் மோசமானது; தேசத்துக்கு உண்மை...' - ...
ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ரூ.8 கோடியில் தங்கும் விடுதியும், ரூ. 2 கோடியில் வாகனக் காப்பகமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால், பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோயிலும், அதன் துணைக் கோயில்களான திருவேங்கடமுடையான் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், செண்பகத்தோப்பு காட்டழகா் கோயில், மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு தமிழகம் மட்டுமன்றி, நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு ராஜகோபுரம் எதிரே கடந்த 2010-ஆம் ஆண்டு பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டது. ஆனால், இந்த விடுதியில் பக்தா்கள் அனுமதிக்கப்படாமல், முக்கியப் பிரமுகா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா் தங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இதனால், வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் தனியாா் விடுதிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல, வாகன நிறுத்துமிடம் இல்லாததால், மாட வீதிகள், ரத வீதிகள், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ரூ.8 கோடியில் பயணிகள் தங்கும் விடுதி கட்டப்படும் என அமைச்சா் சேகா்பாபு அறிவித்தாா்.
இதேபோல, கடந்த நவம்பா் மாதம் விருதுநகா் வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ரூ.2.10 கோடியில் வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என அறிவித்தாா்.
தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக ஆண்டாள் கோயில் அருகே இடம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால், பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, விரைந்து தங்கும் விடுதி, வாகனக் காப்பகம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.