’ஹாஹா வாவ்’: கை, கால்களில் விலங்கு! விடியோவுக்கு மஸ்க் ரியாக்ஷன்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விலங்குடன் நாடு கடத்தும் புதிய விடியோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் பதிவிட்ட கமெண்ட், இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு மக்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பல்வேறு வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களை டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் நாடு கடத்தி வருகின்றது.
கடந்த இரண்டு வாரங்களில் மூன்று அமெரிக்க ராணுவத்தின் விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்ட 332 இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அனைவரின் கை மற்றும் கால்களை விலங்கால் கட்டிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்தியர்களை ஏலியன் எனக் குறிப்பிட்டு, கை, கால்களில் விலங்கிடப்பட்டிருக்கும் விடியோவை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்த 40 மணிநேரத்துக்கும் மேலாக தங்களின் கை, கால்கள் விலங்குகளால் கட்டப்பட்டிருந்ததாகவும், உணவு சாப்பிடகூட கை விலங்குகள் அகற்றப்படவில்லை என்றும் இந்தியா வந்தடைந்தோர் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிக்க : இந்தியாவுக்கு ஏன் 21 மில்லியன் டாலர்கள்? டிரம்ப் கேள்வி!
இந்த நிலையில், கை, கால்களில் விலங்குகளால் கட்டப்பட்டு நாடு கடத்தப்படும் புதிய விடியோ ஒன்றை, ஏலியன் எனக் குறிப்பிட்டு வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த எலான் மஸ்க், ’ஹாஹா வாவ்’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Haha wow https://t.co/PXFXpiGU0U
— Elon Musk (@elonmusk) February 18, 2025