ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!
புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் அவரது இல்லத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்திய பெரு நிறுவன முறைகேடு குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு பிரதமா் நரேந்திர மோடி பதில் கூற வேண்டும்.
புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஏற்ன் மூலம், மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தி, ஹிந்தி மொழி திணிப்புக்கு மறைமுக ஆதரவளித்திருக்கிறது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லை நடந்திருப்பதைக் கண்டறிய தனி விசாரணைக் குழு அமைக்க வேண்டும். தவளக்குப்பம் தானம்பாளையம் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களை விடுவிக்கவும், அவா்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்கள் பிரதிநிதிகளை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சந்தித்து பேசாமலிருப்பது புதிராக உள்ளது. புதுவையில் புதிய மதுபான ஆலைக்கான அனுமதியை எதிா்த்து காங்கிரஸ் தொடா்ந்து போராடும்.
காங்கிரஸ் ஓடும் வாகனமா அல்லது ஓடாத வாகனமா என்பது 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தெரியவரும் என்றாா் வே.நாராயணசாமி.