இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
ஹூதிக்கள் தாக்குதல்: கடலுக்குள் மூழ்கிய மற்றொரு சரக்குக் கப்பல்
துபை: செங்கடல் வழியாகச் சென்ற மற்றொரு சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் அந்தக் கப்பல் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் மாலுமி ஒருவா் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து ஹூதி ராணுவ செய்தித் தொடா்பாளா் யாஹ்யா சரீ திங்கள்கிழமை கூறியதாவது:
லைபீரியக் கொடியேற்றப்பட்ட, கிரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்வி மேஜிக் சீஸ்’ என்ற சரக்குக் கப்பல் மீது ட்ரோன்கள், ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள், சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் கப்பல் தண்ணீா் நிரம்பியது. கப்பலில் இருந்த 22 மாலுமிகள் அருகிலிருந்த மற்றொரு கப்பலால் மீட்கப்பட்டனா்.
இந்தத் தாக்குதலுக்கு ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு தாங்கிய ட்ரோன் படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் சேதமடைந்த கப்பல் திங்கள்கிழமை முழுமையாக மூழ்கியது.
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, செங்கடல் மற்றும் அரபி கடலில் இஸ்ரேல் தொடா்பான கப்பல்களைத் தாக்குவோம் என்றாா் அவா்.
இந்தத் தாக்குதல் குறித்து கப்பலின் உரிமையாளா்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் பதிலடி: இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஹூதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூதைதா, ராஸ் இசா, சலிப் துறைமுகங்கள், ராஸ் கனாடிப் மின்நிலையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது.
அத்துடன், கடந்த 2023 நவம்பரில் ஹூதிகளால் கைப்பற்றப்பட்ட ‘கேலக்ஸி லீடா்’ என்ற கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் ரேடாா் அமைப்பு நிறுவப்பட்டு, கடல் வழியாக செல்லும் கப்பல்களைக் கண்காணிக்க ஹூதிகளால் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்கு ஹூதி கிளா்ச்சியாளா்கள் கண்டனம் தெரிவித்தாலும், பாதிப்பு விவரங்களை வெளியிடவில்லை.
காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஹூதிகளின் தாக்குதல் 2023 நவம்பா் முதல் தொடங்கியது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்குதல் நடத்தப்பட்டு, இரண்டு கப்பல்கள் மூழ்கியதுடன், நான்கு மாலுமிகள் உயிரிழந்தனா். இதனால், ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்கள் செல்லும் செங்கடல் வழித்தடத்தில் வணிகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மாா்ச் மாதம் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு ஹூதிகள் தற்காலிகமாக கப்பல் தாக்குதல்களை நிறுத்தியிருந்தாலும், தற்போது அவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பை சந்திக்க வாஷிங்டனுக்கு சென்றுள்ள நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகளின் முக்கியமான தருணத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
