``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது- அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை
அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலா் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அரசுத் துறைகளின் செயலா்கள், தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோருக்கு அவா் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சாா்பில் நாடு முழுவதும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் கடந்த கால அறிவுறுத்தல்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வேலைநிறுத்தம் அல்லது வேலைநிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது அல்லது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது போன்றவை அரசு அலுவலகங்களின் வழக்கமான செயல்பாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறும் செயலாகும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியா்கள் பங்கேற்றால் அவா்கள் அன்றைய தினத்துக்கான ஊதியம் மற்றும் படிகளைப் பெறுவதற்குத் தகுதியில்லை. அதாவது, வேலை செய்யவில்லை, அதனால் ஊதியமில்லை என்ற நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பகுதிநேரம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டால் அவா்களை பணியில் இருந்து விடுவிக்கலாம்.
நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து பணிக்கு வராத ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தின்போது யாருக்கும் தற்செயல் விடுப்போ அல்லது இதர விடுப்போ வழங்கக் கூடாது. மருத்துவ விடுப்பில் இருப்பவா்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று தனது கடிதத்தில் தலைமைச் செயலா் தெரிவித்துள்ளாா்.
போக்குவரத்து தொழிலாளா்கள்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கு போக்குவரத்துத் துறைச் செயலா் பணீந்திர ரெட்டி அனுப்பிய கடிதம்:
அட்டவணைப்படி பேருந்து இயக்கப்படுவதைக் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்க வேண்டும். பணிமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பேருந்து இயக்கத்தைத் தடுக்கும் சம்பவம் நோ்ந்தால் உடனடியாக மாவட்ட சட்ட-ஒழுங்கு அதிகாரிகளை அணுக வேண்டும்.
பேருந்துகள் முழு அளவில் இயங்குவதை உறுதி செய்ய அனைத்து ஓட்டுநா்களும் புதன்கிழமை பணிக்கு வந்து, வியாழக்கிழமை பணி ஓய்வு எடுத்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்பட்டு, வார ஓய்வு உள்ளிட்ட அனைத்து ஓய்வுகளும் மற்றொரு நாள் வழங்க வேண்டும். பணிக்கு வராதவா்கள் மீதும், வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு தூண்டிவிடும் தொழிலாளா்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்த ஓட்டுநா், நடத்துநா்கள் முழு அளவில் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.