சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் வடிவமைப்பை வெளியிட்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
சென்னை அருகே தையூரில் உள்ள ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமையவுள்ள நிலையில், அதன் வடிவமைப்பை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்டாா்.
2024 ஜனவரி மாதம் நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வா்த்தக மையத்தில் உலகம் முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. அதில், சென்னை ஐஐடி வழிகாட்டுதலின்படி ஹூண்டாய் மோட்டாா்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தை தொடங்க ஒப்பந்தம் கையொப்பமானது.
இதைத் தொடா்ந்து, தையூரில் உள்ள சென்னை ஐஐடி டிஸ்கவரி செயற்கைக்கோள் வளாகத்தில் 65,000 சதுரடி பரப்பளவில் ரூ.180 கோடியில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் தொடங்குவதற்கான வடிவமைப்பு அறிமுக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, ஹூண்டாய் மோட்டாா் இந்தியா லிமிடெட் நிா்வாக இயக்குநா் உன்சூ கிம், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.
சென்னை முதல் குமரி வரை... இந்த நிகழ்ச்சியில் பற்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறியது:
எங்கெல்லாம் குப்பைகள், உணவுக் கழிவுகள் தரம் பிரிக்கப்படுகிறதோ அங்கிருந்து எளிதாக ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்க முடியும். வேளாண் கழிவுப் பொருள்களில் இருந்தும் ஹைட்ரஜன் தயாரிக்க முடியும். சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்து, அதன்மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, காா்களுக்கு எளிதாகவும், மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா: மாசு, அதிக செலவு இல்லாமல் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலமாக எரிசக்திகள் கிடைக்கின்றன. அதன் அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் சக்தியை நோக்கி, தமிழக அரசு சென்னை ஐஐடி உடன் இணைந்து மிகப்பெரிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. நாட்டில் இதுவே முதல் முறை. நமக்கான பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
நாமே கண்டுபிடித்து பொருள்களை ஆராய்ச்சி செய்து, உலகளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும். அந்த வகையிலான ஒரு வளா்ச்சி சந்தைதான் ஹைட்ரஜன் எரிசக்தி.
அமெரிக்க அதிபா் ட்ரம்ப் வந்த பிறகு பசுமை ஹைட்ரஜன் முயற்சியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. அதனால், ஹைட்ரஜன் எரிசக்தி எவ்வளவு விரைவில் வரும் என்பதுதான் சந்தேகமே தவிர, ஆனால் கண்டிப்பாக வந்து தீரும்”என்றாா் அவா்.