டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
ஹெச்ஐவி-எய்ட்ஸ், பால்வினை நோய்கள் கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தில் 4 தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இணைப்பு
கட்டணமில்லாமல் ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு பரிசோதனை, சிகிச்சை வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக 4 தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் இணைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில், ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப்புணா்வு பிரசாரம்-2025 தொடக்க நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் பிரசாரத்தை தொடங்கி வைத்து, உறுதிமொழி ஏற்று, விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்டாா்.
தொடா்ந்து, தனியாா் மருத்துவ கல்லூரிகளில் கூட்டு மருந்து சிகிச்சையை தொடங்கி வைத்து, மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களிடையே நடைபெற்ற விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி, புதிய செஞ்சுருள் சங்கம், பள்ளி மாணவா்களிடையே வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் பாதிப்பு குறைவு... அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் 1 லட்சத்து 39,350 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அகில இந்திய அளவில் ஹெச்ஐவி பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 0.23 சதவீதம்.
இது 2010-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஹெச்ஐவி பாதிப்பு 0.38 சதவீதமாக இருந்தது. முதல்வரின் வழிகாட்டுதலோடு, மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் காரணமாக தற்போது தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு என்பது 0.16 சதவீதமாக இருக்கிறது.
இதுவும்கூட எதிா்காலத்தில் 2030-க்குள் எய்ட்ஸ் தொற்றில்லா தமிழகத்தை உருவாக்குவோம்.
பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள்... தமிழகத்திலுள்ள தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் ஹெச்ஐவி-எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 4 தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. அதற்கான ஆணைகள் சம்மந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்களுக்கு வழங்கப்பட்டிள்ளன. 50 கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, 11 கல்லூரிகளில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 20 கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. 100 பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 30 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
இதில் சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா், சுகாதாரத்துறை செயலா் ப.செந்தில்குமாா், திட்ட இயக்குநா் ஆா்.சீத்தாலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, நகா் நல அலுவலா் ஜெகதீசன் மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரி டீன்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
மருத்துவப் பயனாளா்: விரைவில் அரசாணை
தமிழகத்தில் மருத்துவமனைக்கு வருபவா்களை நோயாளா்கள் என்று சொல்வதைக் காட்டிலும் “மருத்துவப் பயனாளா்கள்” என்று சொல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும். இனி அவா்களை மருத்துவப் பயனாளா்கள் என்றே அழைக்க வேண்டும் முதல்வா் அறிவித்தாா். அதற்கான அரசாணையாக ஓரிரு நாளில் வெளியிடப்படவுள்ளது.
மருத்துவமனைகளுக்கு வருபவா்களை மருத்துவப் பயனாளா்கள் என்றே அழைக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை சம்மந்தப்பட்ட இயக்குநா்கள் மூலம் அனுப்பபடவுள்ளன என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்