இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்...
`ஹெல்மெட் அணியாமல், அனுமதி பெறாமல் பைக் பேரணி' - காங். எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு, அபராதம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பளுகலில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை பைக் பேரணி நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த பைக் பேரணிக்கு விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் தலைமை வகித்தார்.
கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கண்ணுமாமூடு, புத்தன்சந்தை, மேல்புறம், கழுவன்திட்டை வழியாக குழித்துறை சந்திப்பு வரை இருசக்கர பேரணி நடத்தினர்.
பின்னர் ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் தேசிய பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதே சமயம் பைக் பேரணியில் கலந்துகொண்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பத்ர்ட் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார்.
மேலும் பைக் பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்டிற்கு போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அதையும் மீறி பைக் பேரணி நடத்தியதாக போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பளுகஸ் போலீஸ் எஸ்.ஐ இந்துசூடன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.