Niti Aayog: ``மகனுக்காக டெல்லியில் தவம் இருக்கிறார்..'' - ஸ்டாலின் குறித்து பேசிய ஜெயக்குமார்
டெல்லியில் இன்று (மே 24) 10 -வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “மூன்று ஆண்டுகளாக மாநில உரிமைகளுக்காக நிதி பெறப்படவில்லை. ஆனால், இப்போது பிள்ளை பாசத்திற்காக வெண்குடை வேந்தராக மாறிய ஸ்டாலின், டெல்லியில் தவம் இருக்கிறார்.
மூன்று ஆண்டுகளாக டெல்லி செல்லாதவர், இப்போது நிதி பெறுவதற்காக சென்று காத்திருக்கிறார். உப்பு தின்பவன் தண்ணி குடிப்பது போல, தப்பு செய்தவர்கள் ஓடுகிறார்கள்.
அமலாக்கத்துறை (ED) விரைந்து நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டில் மன்னர் குடும்பமாக தம்மை பிரபலப்படுத்தி, ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை நடத்தும் திமுகவின் முகத்திரையை அகற்ற வேண்டும். ஊழல்கள் வெளியாக சட்ட நடவடிக்கை அவசியம்” என்று விமர்சித்திருக்கிறார்.