0, 0, 0... தொடர்ந்து 3வது முறையாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாஷ்-அவுட் நிலையில் காங்கிரஸ்
டெல்லி சட்டமன்ற தேர்தல்
டெல்லி சட்டமன்ற தேர்தலில் மதியம் 12.30 மணி நிலவரப்படி, பா.ஜ.க 48 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் நீடிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி இம்முறை தேர்தலில் 22 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது. இத்தேர்தலில் 2013ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இம்முறை தனித்து போட்டியிட்டது.
ஆரம்பத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அப்பேச்சுவார்த்தை பயனளிக்காத காரணத்தால் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அத்தொகுதியையும் காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/cmjjmmp6/20250207085854raga.avif)
இது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மூன்றாவது படுதோல்வியாகும். 2015ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதியில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதன் பிறகு 2020ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இப்போதும் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் தான் உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் சில தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா போன்றோர் தீவிர பிரசாரம் செய்தனர்.
ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் கிடைக்காது என்று தெரிவித்தன. தேர்தல் முடிவுகள் அதனை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது. கடைசியாக 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் காங்கிரஸ் திண்டாடி வருகிறது.
பா.ஜ.க 1998ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியமைத்தது. அதன் பிறகு இப்போதுதான் டெல்லியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வருகிறது. கடந்த 5 ஆண்டில் ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி ஆளுநர் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தார். அதோடு மதுபானக்கொள்கை விவகாரத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதும் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது,