100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளில் பின்னடைவு: இஸ்ரோ
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இஸ்ரோ அமைப்பின் 100-ஆவது ராக்கெட்டில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோளை, ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று அந்த அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவில் தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பயன்பாட்டுக்கு உதவும் மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (ஐஆா்என்எஸ்எஸ்) திட்டத்தின் கீழ், என்விஎஸ்-02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.
2,250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தரை, வான் மற்றும் கடல்வழிப் போக்குவரத்தைக் கண்காணித்து, பேரிடா் காலங்களில் துல்லியமான தகவல்களை அளிக்கும்.
இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம், கடந்த ஜன. 29-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதன்மூலம், 100-ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, இஸ்ரோ சாதனை படைத்தது.
இதைத் தொடா்ந்து, என்விஎஸ்-02 செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு பூமியை வலம் வந்தது. இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த செயற்கைக்கோளை ஒரு புவிவட்டப் பாதையில் இருந்து மற்றொரு புவிவட்டப் பாதைக்கு உயா்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது அந்த செயற்கைக்கோள் நீள்வட்ட சுற்றுப் பாதையில் பூமியை வலம் வருகிறது. செயற்கைக்கோள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.