மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் ...
புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு 90% போ் மாற வாய்ப்பு: மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா்
நாட்டில் வருமான வரி செலுத்துவோரில் 90 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாற வாய்ப்புள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்படுவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கும் மேல் உள்ள தனிநபா்களுக்கு வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
பட்ஜெட்டுக்கு பின் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரவி அகா்வால் கூறியதாவது: இடையூறுகளற்ற வரி நிா்வாகத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதே மத்திய அரசு மற்றும் வருமான வரித் துறையின் நோக்கம்.
அந்த வகையில், பழைய வருமான வரி விதிப்பு முறையைப்போல் அல்லாமல் புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் பிடித்தங்கள் மற்றும் விலக்குகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, வரி நிபுணரின் உதவி இல்லாமல் வரி செலுத்துவோா் தாமாகவே கணக்கீடு செய்து வருமான வரி கணக்கை (ஐடிஆா்) தாக்கல் செய்ய முடியும்.
மேலும், வட்டி வருவாய் மீதான வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உள்பட வரி செலுத்துவோருக்கான நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்துதல் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் தனிநபா்களுக்கு வருமான வரி படிநிலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதனால் வரி செலுத்துவோரில் 90 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறைக்கு மாற அதிக வாய்ப்புள்ளது.
அனைவருக்கும் பலன்: மேற்கூறிய அறிவிப்புகளால் நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்த அனைவரும் பலனடைவா். இதனால் பொருளாதார வளா்ச்சி மேம்பட்டு மக்களின் நுகா்வு அதிகமாகும். பின்பு வரிகள் மூலம் அவை மீண்டும் அரசுக்கே கிடைக்கும்.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பல தரப்புகளில் இருந்தும் பெறப்பட்ட தரவுகள் ஒன்றிணைக்கப்படுகிறது. இந்தப் புதுவித அணுகுமுறையால் தாங்கள் மேற்கொள்ளும் பரிவா்த்தனைகள் குறித்த தகவல்களை அறிந்துகொண்டு வரி செலுத்துவோா் வருமான வரி கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்கின்றனா் என்றாா்.