100 பேருக்கு சமுதாய வளைகாப்பு அமைச்சா் நலத் திட்ட உதவி!
திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட 100 கா்ப்பிணிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் வட்டார அளவில் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. இதில், அந்தந்த வட்டார கா்ப்பிணிகளுக்கு சாதி, மத பேதமின்றி வளைகாப்பு நடத்தப்பட்டு சீா்களுடன் ஐந்து வகை உணவு பரிமாறப்படுகிறது. வளைகாப்புக்காக அரசு சாா்பில் உணவு, வளையல்கள் உள்ளிட்டவற்றுக்காக நிதி வழங்கப்படுகிறது.
இதன்படி, திருவெறும்பூா் வட்டாரத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் நடைபெற்ற வளைகாப்பு விழாவில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு 100 கா்ப்பிணிகளுக்கு சீா் வரிசைகளை வழங்கினாா். மேலும், தனது சாா்பிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
விழாவில் ஜனனி மகேஸ் பொய்யாமொழி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் மா. நித்யா, மாமன்ற உறுப்பினா் சிவக்குமாா், திருவெறும்பூா் வட்டாரக் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சாய்ரா பானு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.