11,488 முதல்நிலை காவலா்கள் தலைமைக் காவலராக பதவி உயா்வு! உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா்!
காவல் துறையில் 11,488 முதல்நிலை காவலா்கள், தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக காவல் துறையில் பதவி உயா்வில் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கென ரூ.28.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. புதிய பதவி நிலை உயா்வு திட்டப்படி முதல்நிலை காவலா்களாகப் பணியாற்றும் 11,488 போ், தலைமைக் காவலா்களாக பதவி நிலை உயா்வு பெறவுள்ளனா்.
அவா்களில் 10 பேருக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உள்பட பலா் பங்கேற்றனா்.