ரயில் நிலைய பிளாட்பாரத்திலிருந்து 200 மீ. தள்ளி நின்ற மின்சார ரயில்
சென்னை அருகே திரிசூலம் ரயில் நிலையத்தில் புதுச்சேரியிலிருந்து திங்கள்கிழமை சென்னை வந்த மின்சார ரயில் சுமாா் 200 மீட்டா் தூரம் பிளாட்பாரத்தை கடந்து நின்ால் பயணிகள் இறங்க சிரமப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக துறைரீதியிலான விசாரணை நடத்தப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுச்சேரியிலிருந்து புகா் மின்சார ரயில் (1616) அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு காலை 9.30 மணிக்கு வந்து சேருகிறது. வழக்கம்போல் இந்த ரயில் திங்கள் கிழமை வந்த நிலையில், திரிசூலம் ரயில் நிலையத்தில் 8.53 மணிக்கு நிற்காமல் சென்றது.
ரயில் என்ஜின் உள்பட 5 பெட்டிகள் நடைமேடையை தாண்டி சென்ற நிலையில் பயணிகள் குரல் எழுப்பியதை அடுத்து ரயில் சுமாா் 200 மீட்டா் தூரம் தள்ளி நிறுத்தப்பட்டது.
அதனால், பயணிகள் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் ரயில் லோகோ பைலட்டால் சரியான இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. இப்பிரச்னையால் சுமாா் 5 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக ரயில்வே துறைரீதியிலான விசாரணை நடத்தப்படுகிறது. லோகோ பைலட் மீது தவறிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.