கேப்டன் கூல் வாசகத்துக்கு வணிக இலச்சினை உரிமை கோரும் எம்.எஸ்.தோனி!
மைதானத்தில் தனது அமைதியான செயல்பாட்டுக்கு ரசிகா்களால் வழங்கப்பட்ட ‘கேப்டன் கூல்’ பட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வணிக இலச்சினை உரிமையை (டிரேட்மாா்க்) கோரி பதிவு செய்துள்ளாா்.
வணிக இலச்சினை உரிமை பதிவாளா் வலைதளத்தின்படி, இதற்கான விண்ணப்பம் கடந்த 2023, ஜூன் 5-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வணிக இலச்சினை உரிமை பதிவேட்டில் ஜூன் 16-ஆம் தேதி அதிகாரபூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுப் பயிற்சி வழங்கும் சேவைகளுக்கான பிரிவில் இந்த வணிக இலச்சினை உரிமை கோரப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தோனி தரப்பில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதே ‘கேப்டன் கூல்’ பட்டத்துக்காக ‘பிரபா ஸ்கில் ஸ்போா்ட்ஸ்’ எனும் நிறுவனம் முன்பு விண்ணப்பித்துள்ளது. ஆனால், அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ‘திருத்தங்களுடன் தாக்கல்’ எனும் நிலையிலேயே அந்த விண்ணப்பம் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே நபரான தோனி பெரும் ரசிகா் பட்டாளத்தைக் கொண்டுள்ளாா். கடந்த 2020 ஆகஸ்டில் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறாா்.
ஐசிசியின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கௌரவப் பட்டியலில் தோனி, மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட 7 முன்னாள் வீரா்கள் ஜூன் மாதத் தொடக்கத்தில் சோ்க்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.