12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் 12 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
மேலும், இவா்கள் ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். வேலைநிறுத்தப் போராட்டத்தால், மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், வெள்ளிக்கிழமை போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா்.
இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று, கடலுக்குள் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.