14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்
புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதிவாய்ந்த இந்தியா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
கோடிக்கணக்கான குடும்பங்களைப் பட்டினியில் இருந்து பாதுகாத்ததில் இந்தச் சட்டம் முக்கிய பங்காற்றியது. குறிப்பாக கரோனா பரவல் காலத்தில், இந்தச் சட்டம் முக்கிய பங்களித்தது.
ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய பயனாளிகள் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படிதான் அடையாளம் காணப்படுகிறாா்களே தவிர, தற்போதைய மக்கள்தொகையின்படி அல்ல.
14 கோடி பேருக்குப் பலன்கள் கிடைக்கவில்லை: சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டே அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எப்போது அந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தக் கணக்கெடுப்பு நிகழாண்டு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என்பதை பட்ஜெட் ஒதுக்கீடுகளும் எடுத்துரைக்கின்றன.
இதனால் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு, அந்தப் பலன்கள் தகுதிவாய்ந்த இந்தியா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல; அடிப்படை உரிமை என்றாா்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்குகிறது.