Ravi Mohan: ``நானும் டைரக்டர் ஆகிட்டேன்!'' - இயக்குநர் & தயாரிப்பாளர் அவதாரம் எட...
`15 வயதில் அரசுக்கு எதிராக போராட்டம்' -30 வயதில் தூக்கு; சவுதி அரேபியாவுக்கு குவியும் கண்டனம்
சவுதி அரேபியாவில் 15 வயது சிறுவனாக இருந்த போது, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது 30 வயதில் அவரைத் தூக்கில் ஏற்றிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ஜனநாயகத்தைப் பின்பற்றக்கூடிய தேசம் ஆகும். இங்கே மிகத் தீவிரமான குற்றத்திற்காக தான், தூக்கு தண்டனைகளை அரிதிலும் அரிதாக வழங்குவார்கள்.

ஆனால், இந்தியாவிலும் கூட அரசாங்கத்தை எதிர்த்து போராடிய சிலரை 'சமூக விரோதிகள்' என்று கடுமையான சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
பேச்சுரிமையைப் பிரதான கொள்கையாக வைத்திருக்கும் இந்தியாவிலேயே சூழ்நிலை இப்படியிருக்க, சவுதி அரேபியா போன்ற மன்னராட்சி முறையை அடிப்படையாக கொண்டு ஆட்சி நடத்தும் தேசத்தை பற்றி சொல்லவா வேண்டும்?
எதற்காக தூக்கு தண்டனை?
ஜலால் அல் லப்பாத் 1995-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி பிறந்தவர். இவர் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 15 வயது சிறுவனாக இருந்தபோது, அந்த நாட்டின் கத்தீப் நகரில் ஷியா மேஜாரிட்டி சமூகத்தின் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இதற்காக அவரை 2017-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது சவுதி அரேபியா அரசு. இவர் மேல், தேசிய பாதுகாப்பிற்கு களங்கம் ஏற்படுத்தியது, பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்தல் போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கியது.

அதற்கான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து, சவுதி அரேபிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ஜலாலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 21, 2025 அன்று ஜலால் தூக்கில் ஏற்றப்பட்டார்.
மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகளும் கண்டனங்களும்:
உலகம் முழுவதும் நடைபெறக் கூடிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மரண தண்டனைகளை எதிர்க்கும் 'அம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்னும் மனித உரிமை அமைப்பு ஜலாலின் இந்த மரண தண்டனையை கடுமையாக எதிர்த்து விமர்சித்திருக்கிறது.
அவர்கள் கூறுகையில், "ஜலால் போராட்டங்களில் கலந்துக்கொண்ட போது, அவருக்கு 15 வயது.

சிறுவர்களுக்கு மரண தண்டனை
2018-ல் சவுதி அரசு, 'சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது' என்று சட்டம் இயற்றியிருந்தும், அதை மீறி தூக்குத் தண்டனை நிறைவேற்றியிருக்கிறது சவுதி அரேபியா அரசு .
நீதிமன்றத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், துன்புறுத்தலின் மூலம் பெறப்பட்ட சாட்சியங்கள் அடிப்படையில் இருக்கிறது.
மனித உரிமை மீறல்
சவுதி அரேபியவின் 'சிறப்பு குற்றவியல் நீதிமன்றம்' அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வழக்குகளில், அடிக்கடி அநியாய தீர்ப்புகளை வழங்குகிறது. ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையொப்பமிட்டுள்ளது.
அந்த ஒப்பந்தம் சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்று தெளிவாகக் கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தையும், சவுதி அரசின் சொந்த சட்டத்தையும் மீறி ஜலாலை தூக்கிலிட்டதால், 'இது ஒரு மனித உரிமை மீறல்' என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
ஜலாலின் சகோதரர் ஃபாதெல், 2019-ம் ஆண்டு மரண தண்டனை பெற்றார். மற்றொரு சகோதரர் முகமது, இப்போது மரண தண்டனைக்கான நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.