கரூா் வழியாக செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்!
175-ஆவது தமிழ்க்கூடல்: நூல்கள் வெளியீடு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியும் இணைந்து வியாழக்கிழமை நடத்திய 175-ஆவது தமிழ்க்கூடல் நிகழ்வில் நூல்கள் வெளியிடப்பட்டன.
உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேலூா் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் இணைப் பேராசிரியா் அம்பை மணிவண்ணன் ‘மதுரையும் வரலாற்றுச் சின்னங்களும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
கல்வி வளா்ச்சிக்கு சமணா்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கல்விச் சாலைகள் வருவதற்கு அவா்களும் காரணம். மதுரையில் கீழவளவு, அழகா்மலை, முத்துப்பட்டி, தொங்கா் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் சமணா்கள் வாழ்ந்துள்ளனா். சமண மலையில் கல்லூரி செயல்பட்டுள்ளது. பரிபாடலில் மதுரையின் பெயா் ஆலவாய் என்று கூறப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, எழுத்தாளா் சு.வீ. ரேணுகாதேவியின் கட்டுரை நூலான உருமாற்றம், அ. அழகையாவின் சிறுகதை நூலான நெல்லைத் தமிழ் சிறுகதைகள், இளங்கோவன் காா்மேகத்தின் நாடக நூலான தபால், கவிஞா் கவிஜியின் கவிதை நூலான ஆனைமலைக் காடுகளில் சுள்ளி பொறுக்குகிறேன் ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. நூலாசிரியா்கள் அனைவரும் ஏற்புரையாற்றினா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞா்கள், மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரிப் பேராசிரியைகள், மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் சு. சோமசுந்தரி வரவேற்றாா். சங்கத்தின் ஆய்வு வள மையா் ஜ. ஜான்சிராணி நன்றி கூறினாா்.