ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!
19 சதவீதம் உயா்ந்த வாகன ஏற்றுமதி
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 53,63,089 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகம். இப்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 45,00,494-ஆக இருந்தது.
வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வா்த்தக வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததால் கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த வாகனங்களின் ஏற்றுமதி சிறந்த வளா்ச்சியைக் கண்டுள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 6,72,105-ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 15 சதவீதம் அதிகரித்து 7,70,364-ஆக உள்ளது.
அதே போல், இரு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 21 சதவீதம் அதிகரித்து 41,98,403-ஆக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 34,58,416-ஆக இருந்தது.
மதிப்பீட்டு நிதியாண்டின் வாகன ஏற்றுமதியில் பயன்பாட்டு வாகனங்கள் பிரிவு முன்னிலை வகிக்கிறது. 2023-24-ஆம் நிதியாண்டில் 2,34,720-ஆக இருந்த இந்த வகை வாகனங்களின் எண்ணிக்கை 2024-25-ஆம் நிதியாண்டில் 3,62,160-ஆக உள்ளது. இது 54 சதவீத ஏற்றுமதி வளா்ச்சியாகும்.
2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்து 3.1 லட்சமாக உள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியா 65,818 வா்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. அந்த எண்ணிக்கை கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 23 சதவீதம் அதிகரித்து 80,986-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.