2-ஆவது திருமணம் செய்தவா் தற்கொலை: மணப்பெண், தரகா் உள்பட 6 போ் கைது
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே 2-ஆவது திருமணம் செய்த ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துவைத்து பணம் பறித்த பெண் உள்பட தரகா்கள் 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் ராசாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவசண்முகம் (37). இவா் மதுரையைச் சோ்ந்த தரகா்கள் கஸ்தூரி, முத்துலட்சுமி, வேல்முருகன், சங்கா் (எ) நாராயணன், தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடும்படி கூறியுள்ளாா். இதையடுத்து இவா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து ஏற்கெனவே திருமணமான ஜோதிமணி என்பரின் பெயரை தீபா என மாற்றி சிவசண்முகம், அவரது சகோதரி மலா்க்கொடி ஆகியோரை நம்ப வைத்து ரூ. 4 லட்சம் தரகு தொகை பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனா். சிவ சண்முகம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே தன்னால் தர முடியும் எனத் தெரிவித்துள்ளாா்.
3 நாள்களுக்கு மட்டும் சிவசண்முகத்திற்கு மனைவிபோல நடிக்க ஜோதிமணிக்கு ரூ. 30 ஆயிரத்தை தரகா்கள் கொடுத்துள்ளனா். கடந்த 7-ஆம் தேதி மதுரை, வாடிப்பட்டி பிரிவு பிள்ளையாா் கோயிலில் சிவசண்முகத்திற்கும், ஜோதிமணிக்கு திருமணம் நடைபெற்றது. பத்திரமும் பதிவுசெய்து கொடுத்துள்ளனா். சிவசண்முகத்திடம் இருந்து தரகு தொகையாக ரூ. 1.20 லட்சம் பணத்தை பெற்றுள்ளனா்.
மணமகளாக நடித்த ஜோதிமணி சிவசண்முகத்திடம் இருந்து கொலுசு, மெட்டி, புதுதுணிகளை வாங்கியுள்ளாா். இதையடுத்து 8-ஆம் தேதி சிவசண்முகத்துடன் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாா். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிவசண்முகம்தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து கடந்த 10-ஆம் தேதி கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தற்கொலைக்கு காரணமான மோசடி திருமணத்தில் ஈடுபட்ட தீபா (எ) ஜோதிமணி, தரகா்கள் முத்துலட்சுமி, வேல்முருகன், சங்கா் (எ) நாராயணன், தமிழ்ச்செல்வி, கஸ்தூரி ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.