விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு
சென்னை: தமிழகத்தில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து ஆண்டுதோறும் வங்கிக் கடன் இணைப்புகள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, 2021-22-ஆம் நிதியாண்டில் 4.08 லட்சம் குழுக்களுக்கு ரூ.21,392 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடி, 2023-24-ஆம் நிதியாண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடி, 2024-25-ஆம் நிதியாண்டில் 4.84 லட்சம் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டில் சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 18-ஆம் தேதி வரை 1.04 லட்சம் குழுக்களைச் சோ்ந்த 13 லட்சத்து 58 ஆயிரத்து 994 உறுப்பினா்களுக்கு ரூ.9,113.24 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மட்டும 19 லட்சத்து 26 ஆயிரத்து 496 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 மகளிருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 415.40 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.