2025ல் தங்கத்தின் விலை ரூ.90,000 எட்டக்கூடும் என கணிப்பு!
புதுதில்லி: புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தால், பாதுகாப்பின் புகலிடமான தங்கம் புத்தாண்டில் அதன் சாதனை முறியடிப்பு பயணத்தைத் தொடரும்.
இது 10 கிராமுக்கு ரூ.85,000 ஆகவும், உள்நாட்டு சந்தையில் ரூ.90,000 அளவிலும் உயரக் கூடும் என்று கணிக்கப்படுகிறது.
தங்கத்தின் விலை தற்போது ஸ்பாட் மார்க்கெட்டுகளில் 10 கிராமுக்கு ரூ.79,350 ஆகவும், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் 10 கிராமுக்கு ரூ.76,600 ஆகவும் உள்ளது. 2024ல் இந்த உலோகம் உள்நாட்டு சந்தைகளில் 23 சதவிகித வருமானத்தைப் பெற்று தந்தது.
அதே வேளையில், இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று இந்த உலோகம் 10 கிராமுக்கு ரூ.82,400 ஐ எட்டியது. வெள்ளியும் அதன் செயல்திறனை 30 சதவிகித லாபத்துடன் பிரதிபலித்தது, கிலோ ஒன்றுக்கு ரூ.1 லட்சம் என்ற அளவை தாண்டி பயணித்தது.
புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகள் கொள்முதல் மற்றும் முக்கிய மத்திய வங்கிகளின் குறைந்த வட்டி விகிதங்களை நோக்கிய முன்னெடுப்பு ஆகியவற்றால் இந்த உலோகங்கள் 2025லும் வலுவான செயல்திறன் படைத்தவையாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இதன் வளர்ச்சியின் வேகம் மிதமானதாக இருந்தாலும், 2025ல் தங்கத்திற்கான பார்வை நேர்மறையாக உள்ளது.
புவிசார் மற்றும் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்தால் உள்நாட்டில் தங்கத்தின் விலை ரூ.85,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் வெள்ளி மிதமாக உயர்ந்து ரூ.1.1 முதல் ரூ.1.25 லட்சத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.