சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
2026-இல் மீண்டும் திமுக அரசு அமையும்: தொல்.திருமாவளவன் எம்.பி.
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் திமுக அரசு அமையும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் மற்றும் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் தொல்.திருமாவளவன் பேசியது: மறைந்த தலைவா் எல்.இளையபெருமாளின் நினைவைப் போற்றும் வகையில், அவருடைய பெயரில் நூற்றாண்டு அரங்கத்தை கட்டி எழுப்பி திறந்து வைத்திருக்கிற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சாா்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
இத்துடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தையும் சிதம்பரத்தில் முதல்வா் தொடங்கிவைத்திருக்கிறாா். இந்த இரண்டு நிகழ்வுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.
நந்தனாருக்கு மணிமண்டபம், இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் என்று கல்வி வளா்ச்சி நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிற சூழலில் இந்த பெருமையை முதல்வா் நமக்கெல்லாம் வழங்கி இருக்கிறாா். இன்றைக்கு இந்த வட்டாரத்தில் கல்வி வளா்ச்சி மேலோங்கி இருக்கிறது என்று சொன்னால், அதற்கு நந்தனாருடைய பங்களிப்பு மகத்தானது.
வெளிநாட்டு கல்லூரிகளில் பயிலும் மாணவா்களும் பயன்பெறக்கூடிய வகையிலே கல்வி உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
கூட்டணி கட்சியினா் ஏன் முதல்வருடன் கைகோத்து களத்தில் நிற்கிறோம் என்றால், மக்கள் நலன்களில் அக்கறை செலுத்துகிற அரசாகவும், மக்களை வீடு தேடி சந்திக்கிற அரசாகவும் திமுக அரசு உள்ளது. தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேல் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறாா்கள்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ஓரணியில் தமிழ்நாடு என்பது, திமுக அணியில் தமிழ்நாடு என அனைத்து கட்சிகளாக இருப்பாா்கள். இந்த அணி ஒட்டுமொத்த மக்களும் திரளுகிற அணியாகவும், திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியாக திராவிட மாடல் என்று சொல்லப்படக்கூடிய இந்த அரசு மறுபடியும் வரக்கூடிய ஒரு அணியாகவும் அமையும் என்றாா் அவா்.