திருத்தங்கல்: மது போதையில் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்; தட்டிக்கேட்ட ஆசிரியருக்க...
மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமருக்கு ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவுன் இணைந்து கூட்டாகக் கடிதம் ஒன்றை புதன்கிழமை எழுதியுள்ளனர்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மக்கள் கேட்டு வருகின்றனர். இந்தக் கோரிக்கை நியாயமானது. அவர்களின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளில் உறுதியாக வேரூன்றியுள்ளது.
கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் நடக்காதது. ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாகத் தரமிறக்கப்பட்டது இதுவே முதல் முறை.
மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பல சந்தர்ப்பங்களில் நீங்கள் கூறியுள்ளீர்கள். மே 19. 2024 அன்று புவனேஷ்வரில் பேட்டி அளித்தபோதும், செப். 19, 2024 ஸ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் பேசியபோதும், மாநில அந்தஸ்தை மீண்டும் அளிப்போம் என்று உறுதியான வாக்குறுதி அளித்தீர்கள்.
மேலும், உச்சநீதிமன்றத்திலும் விரைவில் மாநிக அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. இதனடிப்படையில், வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கூடுதலாக, லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது லடாக் மக்களின் கலாச்சார, வளர்ச்சி மற்றும் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும், அவர்களின் உரிமைகள், நிலம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதிலும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.