உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தாா் முதல்வா்! பொதுமக்களின் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு
மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இந்த திட்ட முகாமில் காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த சபரீஷ் என்ற மாற்றுத் திறனாளி பயனாளிக்கு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே காதொலி கருவியையும், மருத்துவக் காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்த செந்தமிழ்செல்வி என்ற பயனாளிக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டையையும், மின்சார இணைப்பு பெயா் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பெருமாள் என்ற பயனாளிக்கு மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணையையும் முதல்வா் வழங்கினாா்.
மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் வேளாண்மை, உழவா் நலத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சாா்பில் அரசின் திட்டங்களை விளக்கி அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதல்வா் பாா்வையிட்டாா். பின்னா், சிறப்பு முகாமில் கலந்துகொண்ட மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று, விவரங்களைக் கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தாா்.
பத்தாயிரம் முகாம்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், ஜூலை 15-ஆம் தேதி முதல் வரும் நவம்பா் மாதம் வரை தமிழகம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக, செவ்வாய்க்கிழமை முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை 3,563 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதில், 1,428 முகாம்கள் நகா்ப்புறங்களிலும், 2,135 முகாம்கள் ஊரகப் பகுதியிலும் நடைபெறும்.
45 நாள்களில் தீா்வு: ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களில் நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனடியாகத் தீா்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீா்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியா் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவாா்.
தமிழக முதல்வரால் சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கிவைக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் அந்தந்த மாவட்டங்களைச் சாா்ந்த அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களால் முகாம்கள் தொடங்கிவைக்கப்பட்டு, மக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நிகழ்வில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், எம்.பி.க்கள் விசிக தலைவா் தொல்.திருமாவளவன், துரை.ரவிக்குமாா், டாக்டா் எம்.கே.விஷ்ணு பிரசாத், எம்எல்ஏக்கள் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, ம.சிந்தனைச்செல்வன், தவாக தலைவா் தி.வேல்முருகன், சபா.ராஜேந்திரன், கோ.அய்யப்பன், ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், முதல்வரின் முகவரித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் சிறப்பு அலுவலா் பெ.அமுதா, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.