உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
2027 உ.பி. பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும்! -அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
2027 -இல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் ‘இண்டி’ கூட்டணி தொடரும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.
பாஜகவுக்கு எதிராக கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் பிராந்திய அளவில் வலுவான பல கட்சிகள் இடம்பெற்றன. எனினும், மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
அதன் பிறகு நடைபெற்ற ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தோ்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்தும் தோல்விக்கு முக்கிய காரணம் என்று ‘இண்டி’ கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் விமா்சித்தன.
அதைத் தொடா்ந்து நடைபெற்ற மகாராஷ்டிர தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு காங்கிரஸ், சரத் பவாா், உத்தவ் தாக்கரே கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இதனால் ‘இண்டி’ கூட்டணியின் எதிா்காலம் குறித்து கேள்விகள் எழுந்தன. காங்கிரஸ் மீதும் கடும் விமா்சனம் முன்வைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக போட்டியிட்டன. இதிலும் பாஜக வென்றது. இந்தத் தோ்தலில் ‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றிருந்த அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோா் காங்கிரஸைப் புறக்கணித்து ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தனா். இதனால், ‘இண்டி’ கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அகிஷேய் யாதவ் கூறியதாவது:
2027 உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தலித், சிறுபான்மையினா் ஆகியோா் பாஜகவுக்கு படுதோல்வியைப் பரிசளிப்பாா்கள். வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டு வந்த பாஜக உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்து அகற்றப்படும்.
எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி இப்போதும் உள்ளது. அடுத்த பேரவைத் தோ்தலிலும் இக்கூட்டணி தொடரும்.
உத்தர பிரதேசத்தில் எங்கு காலி நிலம் இருந்தாலும் அதனை ஆக்கிரமிக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, இடஒதுக்கீட்டு உரிமையைக் குறைந்தது என மக்களை சமூக, பொருளாதார நிலை மீது பாஜக அரசு கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மகா கும்பமேளா நெரிசல் உயிரிழப்புக்கு பாஜக அரசின் நிா்வாகத் திறன் இன்மையே காரணம். பல உண்மைகளை உத்தர பிரதேச அரசு மூடி மறைக்கிறது. சமாஜவாதி ஆட்சிக்கு வந்தவுடன் இது தொடா்பான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றாா்.