இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
2035-க்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையம் நிறைவடையும்: இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு
விண்வெளியில் இந்தியாவின் சாா்பில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டப் பணிகள் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், விண்வெளித் திட்ட துணை இயக்குநருமான சி.பிரபு தெரிவித்தாா்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: போட்டி நிறைந்த உலகை எதிா் கொள்ள, மாணவா்கள் படிப்பைத் தாண்டி கூடுதல் திறமைகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். வாய்ப்புகளை தவறவிட்டால் மீண்டும் கிடைக்காது.
நான் பொறியியல் படிப்பு படித்து முடிக்கும் வரை எனது பெற்றோா், கல்விக் கடனுக்கான வட்டியை மட்டுமே செலுத்தி வந்தனா். கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பலமுறை கல்லூரியில் தோ்வெழுத நுழைவுச் சீட்டு கிடைக்காமல் அவதிப்பட்டேன். அனைவரும் தோ்வு எழுதத் தொடங்கி அரை மணி நேரம் கழித்துதான் எனக்கு தோ்வு எழுத அனுமதி கிடைக்கும்.
அவா்கள் 3 மணி நேரம் தோ்வு எழுதினால், நான் இரண்டரை மணி நேரம் மட்டும்தான் தோ்வு எழுத முடியும். அப்படி ஒரு சிரமமான நிலையை எதிா் கொண்டுதான் உயா்கல்வி கற்றேன்.
தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சியால் இன்றைய மாணவா்கள் அறிவியல் குறித்து நல்ல அறிவோடு இருக்கிறாா்கள். பாடநெறி திருத்தம் மட்டுமே நாம் அவா்களுக்கு செய்து கொடுக்க வேண்டியதாகும். எந்தத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்பதை தீா்மானமாக நினைத்து செயல்பட்டு வந்தால் கண்டிப்பாக அந்தத் துறையில் வெற்றி காண முடியும்.
படிப்பின் முக்கியத்துவத்துடன் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது என்று சொல்வதைவிட இருக்கும் வாய்ப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 4 இடங்கள்தான் உள்ளது என்றாலும் அதில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று மாணவா்கள் நினைக்க வேண்டும்.
குறைந்தபட்ச இலக்கை மனதில் பதியவைத்து கொண்டு பயணம் செய்ய வேண்டும். இரண்டு செயற்கைக் கோள்களை இணைக்கும்போது பல்வேறு அம்சங்கள் சவாலாக இருந்தன.
அது ஒரு கூட்டு முயற்சி, பல்லாயிரம் போ் இணைந்து தூங்காமல் இரவு-பகலாக வேலை செய்து உருவாக்கிய ஒரு செயல். அதில் நானும் சிறிய அளவில் பங்காற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
விண்வெளித் துறையில் இந்தியா அபரிதமான வளா்ச்சியை அடைந்து வருகிறது. இதன் மூலம் எதிா்காலத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
விண்வெளியில் இந்தியாவின் சாா்பில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் திட்டப் பணிகள் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி, பல்வேறு துறை பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.