ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்
ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
கோவை மக்கள் சேவை மையம் சாா்பில் சுயம் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பை காந்திபுரம் பகுதியில் வானதி சீனிவாசம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைப்பதற்கு கடுமையான எதிா்ப்பு உள்ளது. ஆனால், மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஊராட்சிகளை மாநகராட்சியோடு தமிழக அரசு இணைத்து கொண்டு இருக்கிறது. இதனால் அந்த ஊராட்சிகளுக்கு மத்திய அரசிடமிருந்து வரக்கூடிய நிதிகள் நிறுத்தப்படும்.
தமிழக ஆளுநா் விவகாரத்தில், அரசியலமைப்பு சட்டப்படி யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதற்குள் அவா்கள் செயல்படுவதற்கு எந்த தடையும் இல்லை. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு ஒன்றும் இல்லை என்கிறாா்கள். ஆனால், குறு, சிறு தொழில்களுக்கு அதிகமான கடன் உதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தமிழகத்துக்கு ஏற்ற வகையில்தான் அமைந்துள்ளது. இதையெல்லாம், விடுத்துவிட்டு பொதுவாக தமிழகத்துக்கு எதுவுமே இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தவெக தலைவா் விஜய் கூறுவதைப்போல மாநில அரசு எந்தக் காலத்திலும் நோ்கோட்டில் பயணிக்கவே இல்லை. அதனால்தான் தமிழகத்துக்கு இவ்வளவு பிரச்னைகள். இங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம். ஆனால், வேண்டும் என்றே மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பிரச்னையை திசை திருப்பும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழ்மொழி என்பது ஆன்மிகத்தில் பஞ்சமே இல்லாதது. தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை. அதனால் ஆலயங்களில் நடத்தப்படும் பூஜைகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
எந்த பூஜை செய்தாலும் தமிழுக்கு வாய்ப்பு இருந்தால் தமிழிலேயே செய்ய வேண்டும். இறைவனுக்கு எந்தவிதமான மொழி பேதமும் கிடையாது. தமிழை எந்த விதத்திலும் புறக்கணிக்கக்கூடாது என்றாா்.