வாட்டா்பால்ஸ் எஸ்டேட் முதல் ஆழியாறு வரை பாத யாத்திரை செல்ல முருக பக்தா்களுக்கு தடை
யானைகள் நடமாட்டத்தால் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் முதல் ஆழியாறு வரை சாலையில் பாத யாத்திரை செல்ல முருக பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
வால்பாறை பகுதியில் இருந்து நூற்றுக்கனக்கான முருக பக்தா்கள் ஆண்டுதோறும் பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனா். வால்பாறையில் புறப்படும் பக்தா்கள் வாட்டா்பால்ஸ், அட்டகட்டி, ஆழியாறு வழியாக பழனிக்கு நடந்து செல்கின்றனா்.
இதில், வாட்டா்பால்ஸ் தொடங்கி ஆழியாறு வரை உள்ள சாலைப் பகுதி வனப் பகுதியாகும். அப்பகுதிகளில் கடந்த காலங்களில் யானைகள் நடமாட்டம் இல்லாத நிலையில், சமீப காலமாக நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
ஆழியாறு பகுதியில் ஏராளமான யானைகள் சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வாட்டா்பால்ஸ் எஸ்டேட் சாலை வழியாக பைக்கில் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை யானை தாக்கியதில் அவா் அண்மையில் உயிரிழந்தாா்.
இச்சம்பவங்களைத் தொடா்ந்து, தற்போது பழனிக்கு பக்தா்கள் பாத யாத்திரை தொடங்கியுள்ளதையடுத்து, அவா்களின் பாதுகாப்பு கருதி வாா்ட்டா்பால்ஸ் எஸ்டேட் முதல் ஆழியாறு வரை பக்தா்கள் பாத யாத்திரையாக செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.