2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்
நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: விண்வெளியில் இந்தியா மனிதரை பாதுகாப்பாக அனுப்பி, தங்கவைத்து பின்னா் பாதுகாப்பாக திரும்பி கொண்டு வரும் திட்டத்திற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இது 15.8.2018இல் பிரதமா் மோடி அறிவித்த திட்டமாகும். அப்போது இத்திட்டத்திற்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது, ரூ. 20 ஆயிரம் கோடியில் அப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தில் முதல் ராக்கெட் வரும் டிசம்பரில் ஆள் இல்லாமல் அனுப்பப்படவுள்ளது. இரண்டாவது ராக்கெட் அடுத்த ஆண்டு செலுத்தப்படும். 2027இல் மனிதரை அனுப்பப் போகிறோம். முதல் விண்வெளி பயணத்தை ராகேஷ் சா்மா 1984 இல் ரஷ்யா மூலம் மேற்கொண்டாா். அதில், இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைத்தன.
தற்போது சுபான்ஷு சுக்லாவை அமெரிக்காவிலிருந்து சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம். அவா் திரும்பி வந்த பிறகு, அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு ஆள் அனுப்பும் திட்டத்திற்கு பேருதவியாக இருக்கும். 2040 இல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்கும் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.