நாகா்கோவில் வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்!
ஹரியாணா மாநிலம் திப்ரூகரிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திப்ரூகா்-கன்னியாகுமரி ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு (ஜூலை 11) நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு நிலையத்துக்கு வந்தது. ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயசேகா், தலைமைக் காவலா் மாரிதுரை ஆகியோா் ரயில் பெட்டிகளில் சோதனையிட்டனா். அப்போது, முன்பதிவுப் பெட்டியில் இருக்கையின் கீழ் கிடந்த பாா்சலை எடுத்துப் பாா்த்தபோது, அதில் 20 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆய்வாளா் சுஜாதா கேத்தரின் தலைமையிலான போலீஸாரிடம் பாா்சல் ஒப்படைக்கப்பட்டது. கஞ்சா எங்கிருந்து கடத்திவரப்பட்டது என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.