22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதலுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறக் கோரிக்கை
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தெரிவித்தது:
தமிழ்நாட்டில் மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் ஈரப்பதத் தளா்வு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய இயலாது. மத்திய அரசின் விதிமுறைகள் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் இடா்பாடுகள் ஏற்படுகின்றன. கடந்த காலத்தில் மாநில அரசு விதிகளை ஏற்படுத்தி கொள்முதல் செய்தபோது, ஈரப்பதத்துக்கு ஏற்ப விற்கும் தொகையில் விவசாயிகளிடம் பிடித்தம் செய்து கொண்டு, 24 சதவீதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது 17 சதவீதத்துக்கு கீழ் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை தமிழ்நாட்டில் செயல்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் இருந்தால்கூட 17 சதவீதத்துக்குள் இருப்பதாக, குறிப்பிட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இது பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு தனது விதிமுறைகளைத் தளா்த்த மறுக்கிறது.
ஈரப்பதத் தளா்வுக்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டால் அங்கிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதாகக் கூறி, காலம் கடத்தி அப்பருவம் முடிவதற்குள் எந்த அனுமதி இல்லாமல் முடிந்து விடுகிறது. எனவே தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் நெல் கொள்முதல் ஈரப்பதம் தொடா்பாக தானே முடிவெடுத்துக் கொள்ள உரிய அனுமதி பெறவும், விவசாயிகள் விற்பனை செய்கிறபோது ஈரப்பதத்துக்கு ஏற்ப, அதற்கான இழப்பு தொகை பிடித்தம் செய்வது கொள்ளவும் நிரந்தர அனுமதி பெற வேண்டும் என்றாா்.