போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சை நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு
போட்டித் தோ்வா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் விடுத்த கோரிக்கைகளைத் தொடா்ந்து, 125.63 சதுர மீட்டரில் புதிய கட்டடம் கட்ட மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இக்கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தனா்.
பின்னா், போட்டித் தோ்வா்களுக்காக தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதிதாக வாங்கிக் கொடுத்த புத்தகங்களையும் வழங்கினா். மேலும் பள்ளிகளைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினா் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்புகளை முடித்த மாணவ, மாணவிகள் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வில் பங்கேற்கும் மாணவா்களுக்காக தங்களது புத்தகங்களை வழங்கினா்.
விழாவில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட நூலக அலுவலா் அபூா்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தஞ்சாவூா் மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 49 லட்சம் மதிப்பில் கூடுதலாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடங்களையும் அமைச்சா்கள் திறந்து வைத்தனா்.