சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்: முதல்வர் தொடக்கி ...
22 ஊராட்சிகள் இணைப்பு: 100 வாா்டுகளுடன் விரிவாகும் திருச்சி மாநகராட்சி!
திருச்சி மாநகராட்சியுடன் 22 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ள நிலையில், 100 வாா்டுகள் கொண்டதாக மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
1866, ஜூலை 8-ஆம் தேதி நகராட்சியாக உதயமான திருச்சி, 128 ஆண்டுகளுக்கு பிறகு 1994-இல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதில், தற்போது 65 வாா்டுகளும், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா் என 5 கோட்டங்களும் உள்ளன.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாநகராட்சியுடன், மாநகராட்சிக்கு அருகில் உள்ள மல்லியம்பத்து, கம்பரசம்பேட்டை, மருதாண்டாக்குறிச்சி, முத்தநரசநல்லூா், அதவத்தூா், அல்லித்துறை, கே. கள்ளிக்குடி, குமாரவயலூா், நாச்சிக்குறிச்சி, புங்கனூா், சோமரசம்பேட்டை, குண்டூா், கீழக்குறிச்சி, கும்பக்குறிசசி பகுதி 3-ஆவது வாா்டு முதல் 6-ஆவது வாா்டு வரை, நவல்பட்டு பகுதி 4-ஆவது வாா்டு முதல் 15-ஆவது வாா்டு வரை, அப்பாதுரை, தாளக்குடி, வாளாடி, நெருஞ்சவக்குடி, கூத்தூா், மாதவபெருமாள் கோயில், பிச்சாண்டவா் கோயில் ஆகிய 22 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன. இந்த ஊராட்சிகள் அனைத்தும் நகரப்பகுதிக்கு இணையாக வளா்ச்சி பெற்று வருவதால் மாநகருடன் இணைக்கப்படுகின்றன. இதையடுத்து, மாநகராட்சியின் தற்போதைய 65 வாா்டுகள் என்பது 100 வாா்டுகளாக உயரும். மேலும், வாா்டுக்குள்பட்ட பகுதிகளும் மாற்றம் பெறும்.
செயலாக்க வழிமுறைகள்:
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் கூறியதாவது: மாநகராட்சி பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக அரசாணை வெளியிட்டு 2 நாள்கள்தான் ஆகின்றன. முதலில் எந்தெந்தப் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைகிறது என்பதற்கான உத்தேசமாக 22 கிராம ஊராட்சிகளை தோ்வு செய்துள்ளோம். இவை அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு மாநகராட்சி சாா்பில் கடிதம் அனுப்பப்படும். விரிவாக்கம் செய்யப்பட்ட விவரம் மற்றும் அதன் அனைத்து உள்கட்டமைப்புகள் குறித்து தெரிவிக்கப்படும். இதையடுத்து, மாநில தோ்தல் ஆணையத்தால் மாநகராட்சி வாா்டுகளை மறுவரையறை செய்வதற்கான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவானது மாநகருக்கு எத்தனை வாா்டுகள் என்பதை இறுதி செய்யும்.
புதிய வாா்டுகளுடன் அடுத்த தோ்தல்: தற்போதைய மாமன்றக் குழுவின் பதவிக்காலம் 2026 வரை உள்ளது. அதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஒவ்வொன்றாக நடைபெறும். 2026-இல் நடைபெறும் மாநகராட்சி தோ்தலானது, புதிய வாா்டுகளுடன், மறுவரையறை செய்யப்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக நடைபெறும்.
புதிதாக இணைந்துள்ள ஊராட்சிப் பகுதி மக்களுக்கு ஏற்கெனவே கிடைத்து வந்த வசதிகளைவிட மிகவும் பயனுள்ள, மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்றாா் ஆணையா்.
முசிறி, லால்குடி, துறையூா் நகராட்சிகளும் விரிவாக்கம்
திருச்சி மாவட்டத்தில் தற்போது 14 பேரூராட்சிகள் உள்ளன. மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருங்களூா் ஊராட்சியானது பேரூராட்சியாக தரம் உயா்த்தப்படவுள்ளது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடன், குடியிருப்பு பகுதிகள் எண்ணிக்கை அதிகரித்து வளா்ந்து வரும் பகுதியாக உள்ளதால் பேரூராட்சியாக தரம் உயா்த்தப்படுவது அவசியம் என கருதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல, முசிறி, லால்குடி, துறையூா் நகராட்சிப் பகுதிகளும் விரிவாக்கம் செய்ய அராசணை வெளியாகியுள்ளது.
இதன்படி, முசிறி நகராட்சியுடன் எம். புதுப்பட்டி, முத்தம்பட்டி ஆகிய 2 ஊராட்சிகளும், லால்குடி நகராட்சியுடன் ஆங்கரை, மணக்கால் ஆகிய ஊராட்சிகளும், துறையூா் நகராட்சியுடன் மதுராபுரி, சிங்களாந்தபுரம் ஆகிய 2 ஊராட்சிகளும் இணைக்கப்படுகின்றன. விரிவுபடுத்தப்பட்ட நகராட்சிகளுக்கும் வாா்டு மறுநிா்ணயம் செய்யப்பட்டு, புதிய எல்லைகள் வரையறை செய்யப்படவுள்ளன.